வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: 2009

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
வலை நட்புக்கு, மெயில் அனுப்ப எல்லோருடைய மெயில் முகவரியும் கிடைக்காததால் வலை மூலம் வாழ்த்து. புத்தாண்டு நல் ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நட்புடன்,
சே.குமார் 

Sunday, December 27, 2009

அது..!?உனக்கும் எனக்குமான
உறவில் புதிதாய் அது..!

நேற்றைய நினைவுகளை
சுமந்தபடி நான்..!
புதிய வரவின் இன்பம்
சுமந்தபடி நீ..!

என் இன்பங்கள் இறக்க
ஆரம்பிக்கும் தருணங்களில்
உன் இன்பத்தின் இசையொலி..!

உனக்குள் தேய்பிறையாய் நான்
வளர்பிறையாய் அது..!

உன் உணர்வுகளில்
என் நினைவுகளைச் சிதைத்து
வளர்ந்தது அது..!

நேற்றுவரை ஒரு கோட்டில்
இருந்த நம் உறவு
இன்றோ இரு கோடுகளாய்..!

இதுவரை நான் உன் சுவாசம்...
இன்றோ நீ அது வசம்..!

நீ தேடிய சுகம் உன்னையும்
உன் மௌனத்தால்
என்னையும் கொல்கிறது..!

எனக்குள் நீ எப்போதும்...
மீண்டும் எப்போது உனக்குள் நான்..?

உன்னோடு வாழும் அதை விடுத்து
உனக்காக வாழும்
என்னிடம் வா அன்பே..!

('அது' - மதுவாகவும் இருக்கலாம் மாதுவாகவும் இருக்கலாம்... படிப்போர் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.)

-சே.குமார்
Friday, December 18, 2009

தொடரும் பொழுதுகள் (உரையாடல் கவிதைப் போட்டிக் கவிதை)


பொழுதுகளின் புழுக்கம் மறந்து
இரவின் மடியில் நாம்...
எழுதாத ஓவியமாய்
என்னருகில் நீ..!
ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!
உனக்குள் வெட்கத்தின்
விளைச்சல்..!
எனக்குள் சந்தோஷ சாரல்..!
அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!
கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..!

-சே.குமார்
Tuesday, December 15, 2009

உன் வரவால்...நீர்-
நிலம்-
காற்று-
வானம்-
நிலா-
உறவாடின என் கவிதையில்
உன்னைப் பார்க்கும் வரை..!

அப்பா-
அம்மா-
அண்ணன்-
அக்கா-
தங்கை-
தம்பி-
உறவு இனித்தது
நீ காதல் உறவாகும் வரை..!

சேரன்-
டேவிட்-
முகமது-
உயிரான நட்புக்குள்
உண்மை இருந்தது
நீ உயிராகும் வரை..!

சினிமா-
கிரிக்கெட்-
புத்தகம்-
பைத்தியம் எல்லாம்
உன் மேல் பைத்தியம்
ஆகும் வரை..!

குட்டிச் சுவர்-
பெட்டிக் கடை-
பொழுதுபோக்கெல்லாம்
பொழுதெல்லாம்
நீ ஆகும் வரை..!

பொங்கல்-
தீபாவளி-
திருவிழா-
வருடம் ஒருமுறை
வந்து சென்றது...
உன் வரவுக்குப்பின்
வருடமெல்லாம் வராதா..?
ஏக்கத்தை என்னுள்ளே
விதைத்துச் சென்றது..!
 
-சே.குமார்
Sunday, December 13, 2009

பாழ்பட்ட மனசுஒற்றை ரோஜா...
உதிரும் புன்னகை...
உறவாடும் கண்கள்...
என்று என்னை
வீழ்த்திச் சென்றவளே..!

எனக்குள் காதல்விதை
விதைத்து பயிராக்கி
பின் பாழாக்கியவளே..!

பாழ்பட்ட மனசு
பண்பட்ட போதும்
ஏனோ இன்னும்
உன் ஞாபகங்கள்
எனக்குள் முளைவிட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன...
முயன்றும் மறக்கமுடியவில்லை..!

-சே.குமார்
Friday, December 11, 2009

சிலைகள்வாழும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
மனிதர்கள் சிலைகளாய்..!
உயர்ந்தவர்களுக்கான
உன்னத பதிவுதான் சிலைகள்..!

அரசாங்கம் மரம்
வளர்க்கிறதோ இல்லையோ
சாதியை குளிர்விக்க
மறவாமல் சிலை வைக்கிறது..!

கண்ணகி இருந்தாலா...?
யோசனையின் வாசலை
கட்டிப் போட்டது கையில்
சிலம்புடன் நிற்கும் சிலை..!

வள்ளுவன் எப்படி..?
சிந்திக்கவிடாமல்
தாடியுடன் சிரிக்கும் சிலை..!
இன்னும் எத்தனை சிலைகள்..!

காவிரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன...
பரிமாறிக்கொள்வோம்
கவிஞர்கள் சிலையை..!

திருவாரூரில் பிறந்தாலும்
திருநெல்வேலியில் சிலை..!
எங்கு பிறந்தால் என்ன
வைக்க இடம் இருந்தால்
வானத்தில்கூட சிலை வைப்போம்..!

சிலைகளால் சிதைப்படுகிறது
சமுதாயம்..!
சேதத்தை தவிர்க்க
வலைக்குள் சிலைகள்..!

சிலைகள் அவமதிக்கப்பட்டால்
அடிபடுவது அப்பாவிகள்..!
நாட்டுக்காக வாழ்ந்த நல் மக்கள்...
சிலைகளாய் சா'தீய' கூட்டுக்குள்..!

சிலைகள் நடும்
விவசாயத்திற்கு விலங்கிடுவோம்..!
மனிதம் விதைக்கும்
விவசாயத்திற்கு உரமிடுவோம்..!

-சே.குமார்
Wednesday, December 9, 2009

கரைந்த கனவுகள்எத்தனையோ கனவுகள்
நெஞ்சுக்குள்..!
நேற்று நண்பன்
கொடுத்த பெஞ்சிலை
மறவாமல் அவனிடம்
கொடுக்க வேண்டும்..!
விமலா மிஸ்ஸிடம்
வீட்டுப்பாடம் காட்ட வேண்டும்..!
சாப்பிடும் போது எதாவது
கொடுக்கும் சாமிலிக்கு இன்று
நாம் கொடுக்க வேண்டும்..!
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறந்து
'அம்மா காப்பாத்து...'
அழுகுரலை மட்டும்
கடைசியாய் காற்றில்
கரைத்துச் சென்றது...
தண்ணீருக்குள் தாவிய பேருந்து..!

-சே.குமார்
Tuesday, December 8, 2009

மழை இரவில்சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!

-சே.குமார்
Saturday, December 5, 2009

நிறைவாய் நீ..!ஒற்றை நாடியாம்
உனக்கு
ஊர் செல்கிறது
அதுதானே உன்
அழகு..!

தெற்றுப்பல்லாம்
உனக்கு
தெருவே சொல்கிறது
உன் சிரிப்பின்
அழகே அதுதானே..!

கோபக்காரியாம்
உறவு சொல்கிறது
கோபம் தானே
உன் குணத்தைக்
கூட்டும் அழகு..!

ராசியில்லாதவளாம்
வீடே சொல்கிறது
உன் ராசியின்
ராசி அறியாமல்..!

எல்லோரும் உன்னை
குறை கூறிய போதும்
என் மனதிற்குள்
நிறைவாய் நீ..!

-சே.குமார்
Thursday, December 3, 2009

விரக்தி பயணம்விடுமுறைக்கு நாட்டுக்கு
மீண்டும் ஒரு விரக்தி பயணம்..!
விழிகளில் வழியும் அன்போடு
விமான நிலைய வாயிலில்
மனைவி... குழந்தை..!

ஒரு வருடப் பிரிவை
ஒரு திங்கள் போக்கிடுமா..?
மனதுக்குள் வேதனை முடிச்சு..!

கால்களை கட்டிக் கொள்ளும் குழந்தை..!
கழுத்தை கட்டிக் கொள்ளும் மனைவி..!
குதூகலத்தின் பிடியில் குடும்பம்..!
சந்தோஷங்களின் மடியில்
கழிந்தன பொழுதுகள்..!

நாட்கள் வாரங்களாகவும்...
வாரங்கள் மாதமாகவும் மாறி...
பாழாப்போன பயண நாளும்
பறந்தோடி வந்தது..!

இரவிலிருந்தே அழுது மயங்கும்
மனைவி... குழந்தை..!
நீர் வற்றிய குளமாய்
சந்தோஷம் வற்றிய முகம்..!

அழுகையின் வாசலை
அடைத்து வைத்து
பயணத்திற்கு தயாராய்..!

'போய் வருகிறேன்' ஒப்புக்காக
சொல்லும் உணர்வில்லா உதடுகள்..!
நேற்றைய சந்தோஷம் துறந்து
உப்பு நீர் சுமந்த விழிகளுடன்...

அடுத்த விரக்தி பயண நாளை
எண்ணியபடி விமானத்தில்..!

-சே.குமார்
Tuesday, December 1, 2009

பால்வினை நோய்

கொடிது... கொடிது... பால்வினை நோய்..!
அதனினும் கொடிது...
அதனால் பாதிப்புக்குள்ளாகும் இளந்தளிர்..!!

(01-12-2009 (செவ்வாய்) உலக பால்வினை (எய்ட்ஸ்) ஒழிப்பு தினம், கட்டறுப்போம் பால்வினை நோயை... உருவாக்குவோம் பால்வினை (எய்ட்ஸ்) இல்லா உலகத்தை..!)
வெறிக்கு வரியாய்...
இச்சையின் எச்சமாய்...
உறவுக்கு வரவாய்..
தாசி கொடுக்கும்
இலவச இணைப்பு..!

***

தாகாத உறவுக்கு
கிடைத்த வெகுமானம்...
தரங்கெட்டுப் போகுமே
உன் மானம்..!

***

இனித்திரும்பா பயணத்தை
இனிதே நடத்திவைக்கும்
வேட்டைக்காரன்..!

***

நீ அலைந்து பெற்றது...
அநியாயமாய்
உனக்கு மட்டுமான
மனைவிக்கும்...
வாரிசுக்கும்..!

-சே.குமார்
Monday, November 30, 2009

புரியாத காதல்


நீ எனக்கு யாதுமாகி
இருப்பாய் என்றிருந்தேன்...
யாரோ மாதிரி
அல்லவா இருக்கிறாய்..?

நேற்றுவரை என்னை
சுற்றிவந்த நீ...
இன்று என்னிடம்
வராமல் சுற்றுவதேன்..?

எத்தனையோ முறை
என் இதழ் தேன்
குடித்த நீ...
இப்போது விஷம்
குடித்தது போல்
வெறுப்பதேன்..?

எத்தனையோ முறை
என் எச்சில்பட்டவை
எல்லாம் உன் வாய்ககுள்..!
என்னை எச்சிலாக்கிவிட்டு
எங்கோ சென்றுவிட்டாயே..?

நான் தடுத்தும்
நீ எடுத்துக் கொண்டாய்...
உன் மேலான
நம்பிக்கையில்
முற்றும் துறந்த
என்னைத் துறந்தாயே..?

மலருக்கு மலர் தாவும்
வண்டாக நீயில்லாமல்
மலர் தாங்கும்
காம்பாக நீயிருப்பாய்
என்றிருந்தேன்...
கனவாக்கிச் சென்றாயே..?

அனுபவத்தின் ஆழம்
புரிந்த எனக்கு
நம் காதலின் ஆழம்
புரியாமல் போனதேனோ..?

-சே.குமார்.
Sunday, November 29, 2009

மனசுமுரட்டுத்தனமாக
கையாளப்பட்டது
குழந்தை..!
துடித்தது மனசு..!

தூரத்தில் நான்
செல்ல வேண்டிய
பேருந்து..!

குழந்தையை மறந்து
பேருந்தில்
இடம் பிடிக்க
என்னையறியாமல்
கால்களை
விரட்டியது மனசு..!

-சே.குமார்
Tuesday, November 24, 2009

நித்திரையை கொன்றவளே..!சித்திரையில் பூத்து
நித்திரையை கொன்றவளே..!
விழித்திரை மூடினால்
கனவுத்திரையில் நீ..!

சன்னல் திரை நீக்கி
நீ தரும் தரிசனம்...
எண்ணத்திரையில்
எழுதாத ஓவியம்..!

நீ முகத்திரை விலக்காமல்
கடந்து சென்ற போதினிலே...
என் மனத்திரை தானாக
மலர்ந்ததன் மாயமென்ன..?

உன் விழித்திரை திறந்தாலே...
வீழ்ந்திடுவர் கனவுத்திரை
நாயகிகள்..!

எத்திரை இருந்தாலும்
என்னுள் முத்திரை
பதித்தவளே..!
என் நித்திரையை
கலைத்தவளே..!

எப்போது உன்
இதயத்திரை விலக்கி
என் உயிர்த்திரையை
காப்பாய்..?

-சே.குமார்
Sunday, November 22, 2009

நீ..!அதிகாலை குளிரிலும்
மார்கழி மாத
மாக்கோலமாய் நீ..!

உன் கருங்கூந்தல்
அலையிலாடும்
படகாய் காற்றில்..!

பொட்டிட்ட நெற்றியோ
ரவிவர்மாவின் ஓவியமாய்..!

குளத்தில் நீந்தும்
கண்கள் தூண்டிலாய்..!

மருவற்ற நாசி
மீனாட்சி கிளியாய்..!

உதடுகளோ
அழகிய செர்ரியாய்..!

சங்கு கழுத்தில்
சதிராடும்
ஒற்றைச் சங்கிலி
தொட்டில் குழந்தையாய்..!

ஓட்டியாணம் இட்ட
ஒடியும் இடையோ
மலைச்சாரல்
ஒற்றையடி பாதையாய்..!

உன் மொத்தமும்
பித்தமாய் என்னுள்..!

நீ...
பித்தனை புத்தனாக்காமல்
பிரம்மன் ஆக்குவது
எப்போதோ..?

-சே.குமார்
சந்தோஷம்பறவைகள் பணி
முடிந்து திரும்பும் மாலை..!
கடற்கரை மணலில் கட்டுண்ட
ஈருடல் ஓருயிர்கள்..!
படுக்கையறையாகிப் போன
படகு மறைவுகள்..!
குதித்து வரும் அலையில்
குதிகால் நனைக்கும் குமரிகள்..!
அலையோடு போராடி
மணல் வீடு கட்டும்
குழந்தைகள்..!
அனைவரும்
சந்தோஷமாய்..!
காதலைத் தொலைத்த
என்னைத் தவிர..!

-சே.குமார்
Saturday, November 21, 2009

காத்திருக்கிறேன்காதலைக் காட்டிய ஞாயிறு
கடந்து போனாலும்
நினைவெல்லாம் நீ..!

எனக்கு ஞாபகம்
இருக்கிறது...
வாசலில் மாக்கோலம்
இட்ட நீ கோலத்திற்குள்
காதல் வைத்துச் சென்றாய்..!

பார்வையாலேயே
பரிமாற்றங்கள் நடத்திய
நமக்குள் பரிபாஷைகள்
எப்போது..?

தனிமையில்
தவிப்போடு நான்...
காதல் சந்தோஷம்
மனசுக்குள்..!

உன் குரல் இப்போது
கேட்காதா..?
ஆவலாய் அலையும்
காது மடல்கள்..!

தென்றலாய் என்
இல்லம் புகுந்த நீ...
என் அன்னையிடம்
திருவிழா செல்வதாக
சொல்கிறாய்...
எனக்கு கேட்கவேண்டும்
என்பதற்காகவே
சற்று அதிக சப்தத்துடன்..!

வெளியில் வரும் நீ
வருகிறேன் என்கிறாய்
என்னிடம் கண்களால்..!

உன் கண் பேசும்
வார்த்தைகளை
வாய் பேசியிருந்தால்..!

என் நினைவுகளைக்
கலைத்தது
உன் இல்லத்தில் இருந்து
கிளம்பிய காரின் ஒலி..!

எப்போது மீண்டும்
எனக்குள் கோலமிடுவாய்..!

எதிர் நோக்கி
வீதியின் விளிம்புவரை
பார்வையை செலுத்தியபடி
காத்திருக்கிறேன்
இரண்டு ஞாயிறாக..!

-சே.குமார்
Thursday, November 19, 2009

காதல் கபடிநீ எனக்கு இட்ட
மருதாணிக்குள்
மறைத்து வைத்தாய்
உன் காதலை..!

சாப்பிடும் போது
சாதம் இடும் சாக்கில்
உன் விரல்களால்
தொட்டுச் சென்றாய்
என் கைகளை..!

அனைத்துக் கண்களும்
தொலைக்காட்சியில்
நிலைகொண்டிருக்க
அடிக்கொரு முறை
என் மீது வீசினாய்
உன் கண்களை..!

குழந்தைகளுடன் நீ
விளையாண்ட போதும்
அவ்வப்போது
எனக்கு பரிசாய்
அனுப்பினாய்
உன் சிரிப்பை..!

அத்தை மகளாக
நீ இருந்தாலும்
இனிக்கத்தான் செய்தது
யாருக்கும் தெரியாமல்
நமக்குள் நடக்கும்
காதல் கபடி..!

-சே.குமார்
Wednesday, November 18, 2009

காத்திருக்கிறேன் காதல் நினைவுகளோடு..!நாம் காதலித்த
அந்த தருணங்களை
இப்போது நினைத்தாலும்
நெஞ்சுக்குள் பசுமையாய்
துளிர் விடுகிறது
நம் காதல்..!

நம் முதல் சந்திப்பு
முருகன் கோவிலில்...
உன் அம்மா பின்னே
நீலத்தாவணியில் நீ..!

நான் பார்ப்பதை
அறிந்து விரலால்
மாக்கோலமிட்டாய்
மார்பிள் தரையில்..!

பின்னர் அடிக்கடி
சந்திப்பதற்காகவே
உன் வீட்டுப் பாதையில்
உலாவரலானேன் நான்..!

காதல் மலர்ந்ததும்
எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
யாரும் பார்த்து
விடக்கூடாதென்ற
பயத்துடன் தெருமுனையில்
காத்திருப்போமே..!

இன்று நினைத்தாலும்
உள்ளுக்குள் அசசம்..!

பாய் கடைக்கு எனக்காக
போன் பேச வரும் உன்னை
பேப்பர் படிப்பது போல்
படித்த அந்த இனிய தருணங்கள்..!

நீ சைக்கிள் ஓட்டும்
அழகை என் வீட்டு
மாடியில் இருந்து
நான் பார்த்து ரசித்த
அந்த அழகிய நாட்கள்..!

ஆற்றில் நீ குளித்துத்
திரும்புகையில்
உன் முகத்தில்
அழகாய் இருக்கும்
தண்ணீர் துளிகளை
கண்டு ரசிப்பதற்காகவே
ஒற்றையடிப் பாதையில்
உன் எதிரே வந்து
அருகில் வந்ததும்
ஒதுங்காமல் ஒரு கணம்
மெய் சிலிர்த்து நிற்கும்
அந்த மாலை நேரங்கள்..!

ஒருமுறை நான் கேட்டேன்
என்பதற்காக நீ கஷ்டப்பட்டு
பயத்துடன் கொடுத்த
அந்த முதல் முத்தத்தின்
ஈரம் என் கன்னத்தில்
இன்றும் பதமாய்..!

இப்படி எத்தனையோ தருணங்கள்
நினைத்த மாத்திரத்தில்
நெஞ்சுக்குள் பசுமையாய்..!

திருமணத்திற்குப் பின்னும்
தொடர்ந்த நம் காதல்...
அதனால் கிடைத்த
சந்தோஷங்கள்
ஒன்றா... இரண்டா..!

நம் காதல் காத்திருப்புகள்
இன்றும் தொடர்கின்றன...
அன்று உன் வரவுக்காக
காத்திருந்தேன்..!

இன்று உன்னிடம் வருவதற்காக
காத்திருக்கிறேன்...
காலன் வருவானா..?

-சே.குமார்
Sunday, November 15, 2009

காதலின் சுகம்கோபங்களும்
தாபங்களும்
தேங்கிய
காத்திருப்புக்குப் பின்
சந்திப்பதே
காதலின் சுகம்..!

சின்னச் சீண்டல்களும்
செல்லச் சிணுங்கல்களும்
இனிய காதலின்
சங்கீதம்..!

மணித்துளிகள்
கரைய பேசினாலும்
என்ன பேசினோம்
என்பது தெரியாதது
காதலின் சுவராஸ்யம்..!

சண்டையும்
சமாதானமும்
மாறி மாறி
வருவதே
இன்பக் காதலின்
இனிய பயணம்..!

வெயிலும்
மழையும்
வீணாய் போகாமல்
அனுபவிப்பதே
காதலின் அடையாளம்..!

என்னுயிர் நீ...
உன்னுயிர் நான்...
என்ற தாரக மந்திரமே
காதலின் இதயமாற்று
அறுவைச் சிகிச்சை..!

ஆம்...
கசப்பு இல்லா
பல்சுவையின்
பரவசம்தான்
காதல்..!

-சே.குமார்
Saturday, November 14, 2009

நினைவுகளில் நீ..!
நீ என்னை
மறைந்திருந்து
ரசித்த திண்ணையில்
நான் அமர்ந்தபோது
என்னுள்ளே
மின்னலாய்
உன் உருவம்..!

உன் பாதங்கள்
சுற்றித் திரிந்த
வளைவுகளில்
வலம் வந்தபோது
என் காதில்
இசையாய் உன்
கொலுசொலி..!

கிணற்றடிக்கு
வந்த போது
நீ பிடித்து
நீர் இறைத்த
தாம்புக் கயிற்றில்
நிழலாடி நிழலானது
உன் வளைக்கரம்..!

தோட்டத்தில் நீ
வளர்த்த
வாடாமல்லியை
வாஞ்சையுடன்
பார்த்த போது
அதில்
பூத்து மறைந்தது
உன் புன்னகை..!

தோட்ட மூலையில்
நீ கிழித்து வீசிய
தாவணியின்
சிறிய பாதியில்
இலைமறை காயாய்
தெரிந்தது
உன் இளமை..!

உன் நினைவாய்
நீ வாழ்ந்த வீட்டை
நான் வாங்கியபோது
நீ விட்டுச் சென்ற
ஞாபகங்கள்
வீடெங்கும்
வியாபித்திருக்க...

நீ...
இல்லா
வெறுமையோடு
நான்..!

-சே.குமார்
Wednesday, November 11, 2009

சுமை

கனவின் பிடியில்
கண்ணயர்ந்து...
விடியலின் விலாசமாய்
அம்மாவின் குரல்..!
கனவுக்கு விடைகொடுத்து
விழித்த போது...
தண்டச் சோறுக்கு
என்ன இன்னும்
தூக்கம்..?
அதட்டலாய்
அப்பாவின் குரல்..!
கனவுகூட சுமையானது..!

-சே.குமார்
Sunday, November 8, 2009

விலைமாது

மங்கிய விளக்கொளியில்
மங்கலாய் ஒரு உருவம்..!
ஆடைகளைப் பற்றிய
கவலையின்றி
பொறுக்கினாள்...
விலகிச் சென்றவன்
விட்டுச் சென்ற
சில்லறைகளை..!

உடம்புக்கு ஓய்வு
தேவைப்பட்ட போதும்
அடுத்தவனின் பசி தீர்க்க
தயாரானாள் தவிப்போடு...

வந்தவன் புதியவனா...
அறிமுகமானவானா...
யாராக இருந்தால் என்ன..?
பணமே பிரதானம்...

யோசிக்க மனமின்றி
பூஜைக்கு ரெடியானாள்...

-சே. குமார்
Monday, November 2, 2009

மனைவிநீயும் நானும்
காதலித்த தருணங்களில்
வாய் ஓயாது
பேசியபடி நீயும்...
ரசித்தபடி நானும்...
சாலையில் வருவோர்
பற்றிய கவலையின்றி
செல்வோமே..!

மழையில் நனைந்து
நான் வரும்
வேளைகளில்
துப்பட்டா துறந்து
துடைப்பாயே..!

உனக்குப்
பிடிக்காத போதும்
எனக்காக
நண்பன் வீட்டில்
மீன் சமைத்தாயே..!

எல்லாம் எனக்கு
மீண்டும் வேண்டும்..!

வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?

-சே.குமார்
Saturday, October 31, 2009

நினைவுகள்

கணக்கிலடங்கா நினைவுகளில்
துல்லியமாய்
உன் நினைவுகள்..!

கற்பனையின்
கதைக்கருவை
உன் நினைவுகள்
என் நெஞ்சினுள்
நிகழ்வுகளாய்..!

மறக்கமுடியாத
செயல்களில்
மறுக்க முடியாமல்
உன் நினைவுகள்..!

நினைவுகள்
நிச்சயமற்றவைதான்..!
உன்
நினைவுகளைத் தவிர..!

என் விடியலின்
ஆரம்பமே...
உன் நினைவுகளோடுதான்...
என்பது உனக்குத்
தெரியுமா...?

-சே.குமார்
குட்டித் தேவதைவேசங்களில்லா பாசத்திலும்...
சொல்லத்தெரியா நேசத்திலும்...
எனக்கு முன்னோடி நீ..!

சொற்களை சொல்லாத
மழலை மொழியில்
கொஞ்சிப் பேசும்
சொன்னதை சொல்லாத
கிளிப்பிள்ளை நீ..!

உன் சுட்டித்தனங்கள்
மற்றவர்களுக்கு
வேப்ப எண்ணையில்
தோய்த்த பாகற்க்காயாக
இருந்தாலும்...
எங்களுக்கோ
தேனில் நனைத்த
பலாச்சுளை போல...

உன் சேஷ்டைகள்
சில நேரம்
சிரிக்க வைத்தாலும்
பல நேரம்
சிந்திக்க வைத்துள்ளது
என்பதே நிதர்சனம்..!

மானாக...
மயிலாக...
குயிலாக...
எப்படி நடந்துகொண்டாலும்
என் இதயத்துடிப்பின்
இருப்பிடமே நீதான்..!

பிரச்சினைகளில்
நான் தவித்த போது
உன் பிஞ்சு விரல்களே
என் நெஞ்சுக்கு ஆதரவு..!

சொந்தங்கள் சூழ
இன்று உனக்கு
பிறந்தநாள் கொண்டாட்டம்..!

உன்னருகே நானில்லா
வருத்தம் எனக்கு..!
நானில்லா வருத்தம்
வேண்டாம் உனக்கு..!

தூரமிருந்தாலும்
தூரமின்றி
வழ்த்துகிறேன் அன்பு மகளே..!


(எனது உயிர், என் குட்டித் தேவதை, என் மகள் ஸ்ருதியின் பிறந்தநாள் அன்று என்னால் போகமுடியாத தருணத்தில் இரவு நேர தனிமையில் கண்ணீருடன் எழுதியது.)

-சே.குமார்
Monday, October 26, 2009

நடை பிணம்

அழத் தெரியாமல் நீயும்...
அழுவது தெரியாமல் நானும்...
அருகருகே..!

ஆறுதலாய் பற்றிக்கொள்ள
கைகள் துடித்த போதும்
மனசு மறுத்தது..!

அதே நிலைமைதான்
உன்னுள்ளும் என்பதை
பறைசாற்றின பரபரத்த
உன் கைகள்..!

உன் நலம் விசாரிக்க
நா துடித்தது...
என் நலம் விசாரிக்க
உன் நா துடிப்பதை
உணர்த்தின
உலர்ந்த உதடுகள்..!

இருந்தும் வாய் பேச
முடியாமல்
உணர்ச்சிகளற்று
பிணங்களாய் ..!

உறவினரின் திருமண
விழாவில் புதிய
உறவுகளோடு நாம்..!

-சே.குமார்
Saturday, October 24, 2009

புரிந்து புரியாமல்
நீண்ட நிலா முற்றத்தில்
மூலைக்கு ஒருவராய்
நீயும் நானும்...

நேற்றுவரை நமக்குள்
நிகழ்ந்த சங்கமத்தின்
ஈரம் இன்னும்
இனிப்பாய் நெஞ்சில்..!

நீ எனக்களித்த
முத்தத்தினால் சிவந்த
என் கன்னம்
இன்று அவமானத்தால்..!

நீ காதல் பரிசாய்
எனக்களித்த சங்கிலி
என் வாயில்
பரிதவிப்போடு..!

நம்மைப் பிரிக்க
கடவுளுக்கு கூட
அதிகாரம் இல்லை...
என்றாயே..!

இதோ பிரிக்கக் கூடிய
கூட்டத்தின் எதிரே
மரப்பாச்சிகளாய் நாம்..!

வளவளவென்று
பேசியபடி அவர்கள்...
வாயடைத்து நாம்..!

எங்கே நாம் பார்த்தால்
அழுது விடுவோமோ...
என்பதால் நிலம்
பார்த்தபடி நான்...
நிலா பார்த்தபடி நீ..!

எனக்கு நீ...
உனக்கு நான்...
நமக்கேன் குழந்தை
என்ற நீ...

குழந்தையில்லா
காரணத்தைக்
கையில் ஏந்தி
பிரிக்க நினைப்போர்
முன் வாயடைத்து..!

உன்னைப் புரிந்தும்
புரியாமல் நான்..!

-சே.குமார்
Tuesday, October 20, 2009

எங்கள் ஊர்இயற்கை அன்னை
அரவணைப்பில்
பசுமை நிறைந்தது
எங்கள் ஊர் என
பொய்யுரைக்க மனமில்லை..!

ஒரு காலத்தில்
பசுமையோடு
இருந்த இடம்
இன்று பாலைவனமாய்..!

கருவேல மரங்களின்
கட்டுப்பாட்டிற்குள்
விளை நிலங்கள்..!

மழையின் போது
நிறைமாத கர்ப்பிணியாகும்
கண்மாயில்
பாசிகளின் பவனியால்
மனிதர்கள் நனைவதில்லை..!

குடிநீர்க் குளமோ
தாகமெடுத்தால்
தண்ணீர் தேடும்
அவல நிலையில்..!

பராமரிப்பின்றி
பாவமாய்
ஊர்க்காவல் தெய்வம்..!

வீட்டுக் கொன்றாய்
வாழ்ந்த மனிதர்கள்..!
வருடம் ஒருமுறை
எட்டிப்பார்க்கும் வாரிசுகள்..!

எது எப்படியோ
இன்னும் உயிர்ப்புடன்
அடி வாங்கி
தண்ணீர் கொடுக்கும்
அடி குழாய்..!
 
-சே.குமார்
Sunday, October 18, 2009

கெடுபிடிகள்..!


பூப்பெய்து விட்டேனாம்
புதிதாக முளைத்தன
சட்டங்கள்...

உள்ளாடை தேடும் தம்பி
என்னிடம் கேட்பது போல்
அவனிடம் கேட்டால்
கடிந்து கொள்கிறாள் அம்மா..!

வீட்டிற்கு வரும்
ஆண்களிடம் பேசினால்
சென்ற பிறகு
திட்டுகிறார் அப்பா..!

தெருவில் செல்ல...
தோழியைக் காண...
ஏகப்பட்ட கெடுபிடிகள்..!

திருவிழா, மணவிழா...
எந்த விழாவானாலும்
சொந்த ஊருக்கு செல்ல
சொல்லமுடியா கெடுபிடிகள்...

கெடுபிடிகளின் மத்தியில்
தூண்டில்  மீனாய் நான்...

மனதிற்குள் வருந்துகிறேன்
ஆணாக பிறந்திருக்கலாமோ..?-சே.குமார்
Wednesday, October 14, 2009

கடைசி நிமிட பரபரப்பு..!

ஓடும் நினைவுகளை
மருட்சியோடு
நினைவுபடுத்தும்
கண்கள்..!

மூச்சின் சுகத்தை
உணரவைக்கும்
நாசி..!

எதாவது கிடைக்குமா?
தேடலில் உதடு
தடவும் நாக்கு..!

துடிப்பின் துடிப்போடு
தடுமாறும் இதயம்..!

ஒட்டிப்போனாலும்
ரொட்டித்துண்டாவது
உள்ளே வராதா..?
ஏக்கத்தில் வயிறு..!

பற்றிக்கொள்ள
ஏதாவது கிடைக்குமா..?
பரபரக்கும் கைகள்..!

ஓடி ஓடி உழைத்ததால்
சோர்ந்து போயிருந்தாலும்
எங்காவது போகத்துடிக்கும்
கால்கள்..!

எல்லாவற்றின் பரபரப்பும்
வர இருக்கும்
அந்த கடைசி
நிமிடத்தை நோக்கி..!


-சே.குமார்
Wednesday, September 23, 2009

காதலா... காமமா...
தனிமையில் நாம்...
விழித்துக்கொண்ட
காமத்தை விரட்டும்
வழி தெரியாமல்...

ஏதேதோ பிதற்றியபடி
உன் கரம் பற்ற...
படக்கென்று பறிக்கிறாய்
படபடப்போடு..!

சிறிது நேர
மௌனத்தின் முடிவில்...
காற்றில் அலையும்
உன் கேசத்தால்
உயிர் பெற்றது காமம்..!

யோசனையின் முடிவில்
தோளில் கை போட்டு
இழுத்து அணைக்க...

பருந்திடம் மாட்டிய
கோழிக் குஞ்சாய்
பதறித் தள்ளினாய்...

இருவரும்
மௌனத்தோடு...
கரைந்த நிமிடங்களில்
கலைந்தது காமம்..!

காதல் காமத்தால்
அழிந்து விடுமோ
மனது யோசிக்க...
காதல் ஜெயித்தது...

பேசாமல் கிளம்பிய
என் கரம் பற்றி
நீ கொடுத்த முத்தத்தில்
கரைந்தது காமம்...
நிறைந்தது காதல்..!

-சே.குமார், பரியன் வயல்.
Tuesday, September 1, 2009

காதல் அனாதைகள்


மக்குள் நடந்த
சண்டையின் சாரலால்
அமைதியானது வீடு...!

ஆளுக்கொரு மூலையில்...
நடந்ததை மென்றபடி..!
இது முதலல்ல
தொடரும் கதைதான்..!

சண்டைக்குப் பின்
சமாதானம் என்பது
நமக்குள் சுலபமல்ல..

சுடும் வார்த்தைப்
பிரயோகம் இரண்டு
பக்கத்திலும்...

வீசிய வார்த்தைகளின்
வீரியம் குறைய
நேரம் பிடிக்குமல்லவா..?

நமக்குள் நிகழும்
சண்டைகளெல்லாம்
எதற்காக..?
விடை தெரிய
வினா இது..!

ஏதோ பேசி
எதிலோ முடிந்து
வாயிலிருந்து கைக்கு
மாறும் நிலைக்கு
தள்ளப்பட்டோம் நாம்..!

யாரால்..?
யோசனையின் முடிவில்
இருவரும் தான்
என்பதே விடையானது...

நமக்குள் இருந்த
விட்டுக் கொடுக்கும்
மனம் மாறியதுகூட
காரணமாக இருக்கலாம்..!

நேரம் கடக்க
இருவருக்குள்ளும்
விசும்பல்கள்..!
வீணாய் கரைகிறது
நிமிடம்..!

தூக்கம் மறந்த
விழிகள் சிவப்பை
போர்த்தியபடி...
அழுகையின்
பிரதிபலிப்பாகக்கூட
இருக்கக்கூடும்...

கோபத்தின் வீரியம்
தணியும் கட்டத்தில்
மெதுவாய் உனைப்பார்க்க...
நீயும் பார்க்கிறாய்...

வார்த்தைகள் வராததால்
வந்த சைகைக்கு
ஆறுதல் தேடி
அலைந்த மனம்
தோளில் சாய்ந்து
விம்முகிறது..

கண்ணீரில் கரையும்
கோபம் சூடாய்
தோள்களில் இறங்குகிறது...

நமக்குள் கனன்ற
கோபம் மாயமாய்..!

என்ன செய்வோம்
நமக்கு அறுதல்
சொல்ல யாருமில்லை...
இருவருக்கும்
இருவரே உறவு...

ஆம்...
நாம் காதல் அனாதைகள்...


-சே.குமார், பரியன் வயல்