வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: March 2010

Wednesday, March 31, 2010

எங்க போறே...?என்ன தாத்தா கோவமாப் போறே..?
ஒண்ணுமில்லடி ராசாத்தி...

இப்படித்தான் பாட்டி போனப்போ
நீ ஒண்ணுமில்லன்னு சொன்னே
பாட்டி இன்னும் வரலை...

நீயும் ஒண்ணுமில்லன்னு சொல்றே...
அப்ப நீயும்.... வாயைப் பொத்தி
மடியில் அமர்த்தி...

பாட்டி போனாங்கள்ல
அவங்களைத்தான்
பார்க்கப் போறேன்...

நானும் வாரேன்...

ரொம்பத்தூரம் போகணும்
தாத்தா பாத்துட்டு வந்துடுறேன்...

சீக்கிரமா பார்த்துட்டு வா...
எங்கிட்ட கூட்டிக்கிட்டு வா...

ராத்திரியாச்சின்னா வராதே...
பேயெல்லாம் வருமாம்...

சரிடி என் செல்லம்...
துண்டை தோளில் போட்டுக்
கொண்டு மனைவியை புதைத்த
இடம் நோக்கி நடந்தார்...

சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!

-'பரியன் வயல்' சே.குமார்

படத்துக்கு நன்றி : வண்ணத்துப்பூச்சி சினிமா குழுவிற்கு


Sunday, March 28, 2010

கலை...!வீட்டிற்குள் நுழையும் போது
வாசலில் கீச் கீச் சப்தம்...
அண்ணாந்து பார்த்தால்
நிலைப்படிக்கு அருகில்
சிட்டுக்குருவிக் கூடு..!
ஏனோ கலைக்க மனமில்லை..!

கர்ப்பமுன்னு டாக்டர்
சொல்லிட்டாங்க மனைவி
சொன்னதும் யோசிக்காமல்
கலைத்துவிடு என்றது மனசு..!

-'பரியன் வயல்' சே.குமார்.
Wednesday, March 24, 2010

வாழ்க்கையாய் நீ..!

ஏதோ எழுத நினைத்து
பேப்பரில் பேனா
முத்தமிட்டதில்
பிரசவித்தது
உன் பெயர்தானடி..!

நித்தமும் நினைவுகளில்
நீந்தும் நீ கனவிலும்
என் கண்களில்..!

சாக்லேட் கிடைத்தால்
சந்தோஷப்படும்
குழந்தையைப் போல்
உன் தரிசனத்தில்..!

இரயில் பயணத்தில்
அருகருகே இருந்தும்
இணைகோடுகளாய்..!

கோயிலில் நீ
ஏற்றிய நெய்தீபம்
யாருக்காக என்பதை
தீபம் அறியும்..!

உன் வேண்டுதல்
உனக்கானதில்லை
என்பதை அந்த
தில்லை நாயகன்
அறிவானோ..?

நீ மூன்றாம் பிறையாய்
உயிருக்குள்...
பௌர்ணமியும்
அமாவாசையும்
உயிர்ப்பதில்லை..!

சீதை...
அகலிகை...
கண்ணகி...
தமயந்தி...
பாஞ்சாலி...
எல்லாம் வரலாறாய்..!
நீ வாழ்க்கையாய்..!

-'பரியன் வயல்' சே.குமார்.
Saturday, March 20, 2010

டைரியும்... மனைவியும்...

எனக்காக எழுதிய டைரிக்குறிப்புகள்
இன்று உன் நாவில் முள்ளாய்..!

படிக்கும் காலத்தில் வந்த காதல்
பந்தாடப்படுகிறது உன் நாவில்..!

எல்லாம் உன்னிடம் சொன்ன நான்
எதைச் சொல்ல மறந்தேன்..?

காதல் என்பது கருக்கொலையல்லவே...
வாலிபத்தில் வரும் வசந்தம்தானே..!

எனக்கும் அவளுக்குமான நட்பில்
ஊடலும் கூடலும் பருவத்தின் நாடகமே..!

காதலித்ததற்கு எப்படி காரணம் இல்லையோ
அதுபோல பிரிவிற்கும் காரணம் இல்லை..!

எனது டைரியில் இருக்கும் எல்லாம்
எனக்குள் ரகசியமானவை மட்டுமே..!

அவற்றைப் படித்துவிட்டு
என் இதயத்தைக் கிழிப்பது ஏனோ..?

ஒவ்வொரு இரவிலும் தொடரும் பகலிலும்
வார்த்தைகளால் கொல்கிறாயே ஏனடி..!

என்னைக் கொல்லாமல் இருக்க எழுதிய டைரி
கொல்லாமல் கொல்கிறது உன் பேனாமுனை பேச்சில்..!

நான் மறந்த காதலை நீ மீண்டும்
என்னுள் மலரச் செய்ய்த் துடிக்கிறாய்..!

வேண்டாம் பெண்ணே..!
தொலைந்த பொழுதுகளைக் கொண்டு
வரும் பொழுதுகளை தொலைக்க நினைக்காதே..!


-'பரியன் வயல்' சே.குமார்
Wednesday, March 17, 2010

தொலையாத ஞாபகம்..!


பிறந்த மண்ணில் கால் பதித்தபோது
ஞாபகத்தில் ஞாபகமாய்...

ஒற்றைப்பனையும்... குட்டைப்பனையும்...
கோணப்பனையும்... சதைக்காச்சியும்...

இனிப்புப்புளியும்... கரும்புளியும்...
வத்தக்காச்சியும்... சுடுகாட்டுப்புளியும்...

கெழுத்திமீனும்... கெண்டைமீனும்...
விரால்மீனும்... அயிரைமீனும்...

பரந்த கண்மாயும்... விளைந்த வயல்வெளியும்...
நீரோடும் வாய்க்காலும்... முண்டாசு மனிதர்களும்...

ஓட்டு வீடும்... ஒத்த வீடும்...
வயலார் வீடும்... அம்பலார் வீடும்...

ராசுமாமாவும்... மீசைமாமாவும்...
கட்டையனும்... குட்டையனும்...

காளி ஆயாவும்... கண்ணம்மா பாட்டியும்...
அழகம்மா அக்காவும்... ராஜாத்தியும்...

கருத்தப் பசுவும்... வெள்ளச்சி எருமையும்...
செம்மறி ஆடும்... பாசமுள்ள ராஜா நாயும்...

மாரியம்மன் கோயிலும்... கருப்பண்ணசாமி வீடும்...
கம்மாக்கரை முனியும்... மரத்து நாகரும்...

காதலை விதைத்த வன்னி மரமும்
விதையை வீசிய வேள்விழியாளும்...

வாழ்க்கையை கற்றுக் கொடுத்த காதலும்...
வாழக் கற்றுக் கொடுத்த மனிதர்களும்...

தொலைந்த எல்லாம் ஞாபகமாய்...
தொலையாமல் என் சிறிய இதயத்துக்குள்...

-'பரியன் வயல்' சே.குமார்.
Thursday, March 11, 2010

முகம் காட்டுவாயா அம்மா..!

இது 50வது படைப்பு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் மூலமாகவும் தமிழிஷ், உலவு மற்றும் தமிழ்மணத்தின் மூலமாக வாக்கு அளித்தும் வாழ்த்துக்களை வழங்கும் தோழர், தோழியர்க்கும் நன்றிஅம்மா..
கனவுகளைச் சுமக்கும் எனக்குள்
உன் நினைவுகளைச் சுமக்க வைக்கிறாயே..!

பாட்டில் பாலும் கார்டூன் படமும்
கசப்பாய் இருக்கின்றன..!

ஒவ்வொரு இரவும் உனக்காய்
விழித்திருப்பேன் இமை மூடுவதறியாமல்..!

நீ எனக்கு நிலா காட்ட வேண்டாம்...
நிலா காட்டி சோறுட்ட ஆயா இருக்கிறாள்..!

நித்தம் கதை சொல்ல வேண்டாம்...
பழங்கதை சொல்ல தாத்தா இருக்கிறார்..!

கட்டியணைத்து முத்தமிட வேண்டாம்...
கடிந்து பேசினாலும் அவ்வப்போது
முத்தமிட அப்பா இருக்கிறார்..!

மாதர் சங்கமும் பொது நலமும் உனக்குப் பெருமை...
உன் முகம் கண்டால் எனக்கு இனிமை..

ஒரு முறை உன் முகம் காட்டி செல்வாயா..?
நினைவுகளின் சுமையை இறக்கி
உன் மலர் முகம் சுமந்து செல்கிறேன்..!

-'பரியன் வயல்' சே.குமார்.