வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: January 2010

Sunday, January 31, 2010

இதுதான் உலகம்


நேற்றுவரை மனிதராய்
இன்று பிணமாய்..!

கதறி அழும் ரத்த உறவு..!
சோகத்துடன் மற்ற உறவு..!

வந்து போகும் பழக்கங்கள்..!
வராமல் இருக்கும் எதிர்ப்புகள்..!

கொடுத்த கடன் எவ்வளவு..?
வாங்கிய கடன் எவ்வளவு..?
வகையறியாமல் வாரிசுகள்..!

பயணிக்க தயாராய் பல்லாக்கு..!
பயண இறுதியில் படுக்கைக் குழி..!
எல்லாம் முடிந்து பட்டுவாடா...

நேற்றுவரை கேட்காமல் உதவிய
மனிதம் மண்ணுக்குள்..!

பத்து ரூபாய் பணத்துக்காக
சண்டையிடுகிறார்கள்
கேட்காமல் பெற்றவர்கள்..!

-சே.குமார்
Thursday, January 28, 2010

எல்லாம் நானாக...


உன் விழிமீன்கள்
நீந்தும் தடாகத்தில்
விழுந்த என்னை
விரட்டி விரட்டிப்
பார்க்கிறாய்..!
உன் விழியில்
என் உருவம்
மறையும் வரை..!

உன் நாசித் துவாரத்தின்
நளினத்தில் என்
உயிரின் வாசனையை
உறிஞ்சிப் பார்க்கிறாய்..!
என் உயிரின் வாசம்
உன் அருகாமையில்
உலரும் வரை..!

உன் உதடுகளின்
உச்சரிப்பில் நீ
தேடும் என் பெயரின்
அலைவரிசை...
என் நினைவு
மறையும் வரை..!

உன் உயிர்த்துடிப்பின்
லப்டப்பில் மெல்லிசையாய்
என் நினைவின் நாதம்...
உயிர்த் துடிப்பின்
உயிர் தொடரும் வரை..!

எல்லாம் நானாக...
நான் வெறுமையாய்..!

-சே.குமார்.
Monday, January 25, 2010

வேம்பு..!உழைத்த களைப்பில்
கட்டிலில் உருண்டு
படுத்த போது
தலைக்கு மேல்
தாலாட்டியது
வேம்பு..!

எத்தனை பாரம்
எனக்குள் இருந்தாலும்
வாசலில் வரும்போது
வசந்தத்தை ஊட்டி
வலியைக் குறைத்தது
வேம்பு..!

குடிசையின்
வாசலில் பகலவனை
நெருங்க விடாமல்
பார்த்துக் கொண்டது
வேம்பு..!

குடிசை வீடு ஓடானது...
ஓட்டு வீடு காரை வீடானது...
வீட்டுக்குள் படுத்து
விட்டம் பார்த்த்போது
உத்திரமாய் சிரித்தது
வேம்பு...!

-சே.குமார்
Thursday, January 21, 2010

பார்வையோ பலவிதம்என்னையும் உன்னையும்
இணைத்துப் பேசியது ஊர்..!

உன் காதலி நானென்று
உறக்கச் சொன்னது நட்பு..!

எதேச்சையாய் நீ பார்த்தாலும்
என்னைப் பார்ப்பதாய் கட்டுக்கதை..!

என் பாதம் உன் பாதை
தொடர்ந்தால் பார்வையின்
பார்வையோ பலவிதம்..!

என் சிரிப்புக்கு நீ திரும்பினால்
நமக்குள் சிக்னலாம்...
சிலரின் சிக்கலில்லா வார்த்தைகள்..!

எல்லாமே அவர்கள் முடிவில்
நமக்குள் இதுவரை இல்லை
அப்படி ஒரு எண்ணம்..!

நீயும் நானும் இன்னும் நட்பாய்...
தொடரும் நட்பில் தொலையட்டும்
அவர்களின் கனவு..!

-சே.குமார்
Tuesday, January 19, 2010

அனுபவிக்க ஆசைவாகன இரைச்சலின்றி
அமைதியாய் விடியும்
அழகிய காலை..!

விடியலுக்கு முன்னே
விண்ணைத் தட்டும்
சேவல்களின் கூவல்கள்..!

பால் குடிக்க கன்றை
அழைக்கும் பசுக்கள்..!
கோலமிடும் குமரிகள்..!

வயல்களுக்கு இடையே
விழித்து வரும் சூரியன்..!

பக்கத்து வீட்டிலிருந்து
கேட்கும் சுப்ரபாதம்..!

இரைதேடி இலக்கு
நோக்கிச் செல்லும் பறவைகள்..!

வயலுக்குச் செல்லும் ஆண்கள்..!
எருக்கூடையுடன் பெண்கள்..!

நீர் நிறைந்த கண்மாய்..!
நீர் பாய்ந்தோடும் வாய்க்கால்கள்..!
காற்றுக்கு தலையசைக்கும் பயிர்கள்..!

எல்லாம் அனுபவிக்க ஆசை..!
என்ன செய்ய...

இயந்திரமாகிவிட்ட உலகில்
சிக்கிவிட்டதே என் கிராமம்..!

-சே.குமார்
Friday, January 15, 2010

மறுபிறப்புவலியோடு ஒரு இரவுப்பயணம்
அருகில் நீ அவஸ்தையாய்..!
இடிந்துபோன என் மனம் போல
வழியெங்கும் இருட்டின் வாசம்..!

எதிர்வரும் வாகனங்களின்
வெளிச்ச அருவியில்
கலங்கிய நம் கண்கள்
வெள்ளி மீன்களாய்..!

தொடரும் அவசரப் பயணத்தில்
இடை இடையே வேதனையில்
வெடிக்கும் உன் அழுகுரல்..!

காற்றைக் கிழித்துக் கொண்டு
பறக்கும் காருக்குத் தெரியவில்லை
அதற்கு முன் என் மனம்
போய்க் கொண்டிருப்பது..!

உன் விசும்பலின்
நீரோடை என் கண்ணில்...
உன் வேதனையின்
விலாசம் என் இதயத்துள்..!

துடிக்கும் உன்னுடம்
துணையாய் நான்...
இலக்கை எட்டிவிட்ட
நிம்மதி நமக்குள்..!

உன் வீறிடல்களுக்கு இடையே
புதிய உயிரின் அழுகுரல்...

மறுபிறப்பு உனக்கு மட்டுமல்ல...
இடைவிடாது துடித்த
என் இதயத்துக்கும்தான்..!

-சே.குமார்
Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்...புத்தரிசி பொங்கல்..
புதுப்பானை பொங்கல்...
பச்சரிசி பொங்கல்...
புதுவருடப் பொங்கல்..!

வாய்க்கால் நீரில் வளர்ந்து
செழித்த அருகம்புல்லும்
பசுமாட்டின் பசுஞ்சாணியும்
பிள்ளையாராய் கொலுவிருக்க...

செங்கரும்பும் பனங்கிழங்கும்
பக்கத்தில் வீற்றிருக்க...
பச்சரிசி பால் பானையில்
பொங்கிவர துடிக்கும் வேளை
வாயெல்லாம் பல்லாய்
வாரிசுகளோடு விவசாயி...!

எத்துணை காலம் கஷ்டப்பட்டாலும்
ஏர் பிடித்த கரத்தில்
பொங்கல் சிரிக்கும் போது
பட்ட கஷ்டம் பாலாய்..!

வறண்ட பூமியும்...
கருவேல மரமும்...
காய்ந்த வாய்க்காலுமாய்...
காலம் மாறினாலும்...
தை வந்தால் வலி போகும்...

விவசாயம் மீண்டும் பெருகட்டும்...
விவசாயி கண்ணீர் விலகட்டும்...
புதுப்பானை பொங்கல் போல்
புதுவருடம் பொங்கட்டும்...!

(வலை நட்புக்கும் தமிழ்மணம், தமிழிஷ், உலவு மற்றும் அனைத்து முகம் அறியா நட்புக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.)

-சே.குமார்.
Sunday, January 10, 2010

நாட்குறிப்புகல்லூரிக் காலத்தில்
கிறுக்கிய டைரி...
காலங்கள் கடந்தாலும்
தாள்கள் வெளுத்தாலும்
நினைவுகள் வெளுக்காமல்..!

பெட்டியின் அடியில்
பொக்கிஷமாய்...
எதோ தேடும் போது
எட்டிப்பார்த்தது..!

எடுத்துப் பிரித்தால்
நட்பின் வாசம்...
நட்புக்குள் பகை...
கல்லூரிக் கட்டுரைப் போட்டி...

கட் அடித்துச் சென்ற சினிமா...
மாணவர்கள் சண்டை...
அண்ணனின் திருமணம்...
தாத்தாவின் மரணம்...

ஊருக்கு வந்த தார்ச்சாலை...
பஞ்சாயத்து தொலைக்காட்சி...
கோவில் திருவிழா...

காதலின் வாசம்...
காதலியின் பரிசம்...
காதலியின் முத்தம்...

முதல் அரியர்...
முதல் சிகரெட்...
முதல் சேவிங்...
முறிந்த காதல்...

எல்லாம் எழுத்தாய்
பார்த்தபோது...
என்னுள் உணர்ச்சியின்
உந்துதலால்
கண்ணீரின் ஊர்வலம்..!

-சே.குமார்.
Monday, January 4, 2010

பாசம்


மாரியாயி கோவில் திருவிழா
முத நாளே வந்துறனும்...
மகளின் அழைப்புக்கு
வயலிலிருந்து திரும்பா
கணவனை வசைபாடியபடி
தயாரானது தாய்மனம்..!

தட்டிக் கதவு திறக்கும்
ஓசைக்கு எட்டிப் பார்த்தவள்
இந்நேரம் என்ன செஞ்சே...
நேரத்தில போகவேணா...
விரசா கிளம்புய்யா என்றா..!

ஆங்... தண்ணியடச்சு
விட்டதுல நாழியாயிருச்சு...
இந்தா கிளம்பிட்டேன்...
என்றவரின் மனசுக்குள்
ஆறிப்போனது காபி ஞாபகம்..!

மிளகாய்... மல்லி...
அரிசி... பயறு...
கடலை... கோதுமை...
வளர்த்த வெடக்கோழி...

எல்லாம் மகளுக்கு...
எடுத்து வைக்கும் போது
சேர்த்து வச்ச சிருவாட்டுக்
காசும் சேர்ந்து கொண்டது..!

இருப்பதில் நல்லதாய்
தேடிக்கட்டிய சேலையும்...
நேற்று மாற்றிய மஞ்சக்கயிறும்...
செம்மண் படர்ந்த தலையும்
அழுக்கேறிய கால்களும்
வெள்ளையறியா வேட்டியுமாய்...
மக வீடு நோக்கி...

சொந்தங்கள் எல்லாம் கூட்டமாய்...
மக வீடு கலகலப்பாய்...

'இப்பத்தான் வந்தீங்களா...?'
ஓடி வருவாள் மகள்
இருமணமும் ஒன்றாய் நினைக்க...

'இப்படித்தான் வருவீங்களா...?'
மகளின் குரலில் கரைந்தது பாசம்..!

-சே.குமார்