வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: April 2010

Tuesday, April 20, 2010

அப்பத்தாவரிஞ்சு கட்டிய சேலையும்
காதில் ஆடும் தண்டட்டியும்
வாயில் ஊறும் போயிலையும்
நெத்தி நிறைஞ்ச குங்குமமுமாய்...

வாக்கா வரப்பு சண்டையில
இப்பவும் முதலிடம்தான்...

சண்டைக்குன்னு போனா
சரமாரி 'அந்த' சொல்லுதான்...

அதுக்குப் பயந்தே
அப்பத்தாகிட்ட வாய் கொடுக்க
பயப்படும் ஊருசனம்...

களவாணிப்பய... கிறுக்குப்பய...
ரெக்க மண்டை... விசுக்கான்...
அப்பத்தாவின் அடைமொழிகள்...

பேரனை மட்டும் செல்லமாய்
தீவட்டித்தடியன்...

ஐயா முடியாம விழுந்தப்ப
போயி சேராம
வதையை வாங்குது....
என்று பேசினாலும்...

இப்பல்லாம் அப்பத்தா
யாரோடும் சண்டையிடுவதில்லை...
பட்டப்பெயர் பயன்படுத்துவதில்லை...
முகத்தில் கவலை ரேகைகள்...

தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?

யாராலும் அறியமுடியவில்லை
அப்பத்தாவின் மனசை..!

-'பரிவை' சே.குமார்

Tuesday, April 13, 2010

சித்திரை...தமிழ் வருடத் தலைமகளே...
தமிழர்களின் பொன்மகளே...
அரசாணையால் உனக்கு
சிறையிட்ட போதினிலும்...
அத்'தை' மகளை
அரியாசனத்தில் அமர
வைத்த போதினிலும்...
தத்'தை' மகளாம் நீ
என்றும் எங்கள்
முதல் மகளே...!

என் நட்புக்கும் பாசமலர்களுக்கும் தமிழ் புத்தாண்டு / சித்திரை முதல் நாள்
வாழ்த்துக்கள்.

-'பரியன் வயல்' சே.குமார்.
Sunday, April 11, 2010

உயிர் 'கொல்லி'


சல்லாபிக்க நினைத்த
மனசு உல்லாசம் தேடியது..!

வாழ்க்கை வசந்தத்தில்
வாலிபத்தின் விருந்து..!

வாடகை உடம்போடு
கரைந்தது இரவு..!

எச்சத்தின் உச்சம்
தொடர்ந்த இரவோடு
தொலைந்தது நிம்மதி..!

கேட்டுப் பெற்றவள்
கேட்காமல்
கொடுத்துச் சென்றாள்.

-'பரியன் வயல்' சே.குமார்.
Friday, April 9, 2010

வாங்கி வந்த வரம்..!

ஏலே ராசு
எங்கடா போனே முண்டம்?
மாட்டை அவுக்காம...

இந்தா வாரேன் ....
குத்திய பம்பரம்
பாக்கெட்டுக்குள் நுழைய
எதேச்சையாய் இழுக்கப்பட்டது
பள்ளியில் கொடுத்த காக்கி டவுசர்..!

ஓடிய வேகத்தில்
கசாலைக்குள் நுழைய முடியாமல்
தடுத்தது மூச்சுக்குரல்..!

கட்டிய மாடுகளுக்கு
அந்தப் பக்கம்...
அப்பாகூட யாரோ....

மாட்டை அவிழ்க்க சென்றால்
அப்பா அடிப்பார்...
அவிழ்க்காமல் சென்றால்
அம்மா அடிப்பாள்...

யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!

என்னடா மாடவிழ்க்காம...?
கேள்வி முடியும் முன்...
அப்பா அங்கே.... பதிலாய்...

அவரு எதோ தப்பு பண்றாரு..?
நீ கேக்க மாட்டியா...?
கண்களில் கோபம் கண்ணீராய்...

அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!


-'பரியன் வயல்' சே.குமார்
Monday, April 5, 2010

ரசிகனாய்..!உன் ஒவ்வொரு அசைவையும்
அணுஅணுவாய் ரசிக்கும் ரசிகனாய்..!

நீ கோலமிடும்போது
நெற்றியில் விழும் கற்றை
முடியை மணிக்கட்டால்
தள்ளிவிடும் பாங்கு..!

குளித்து நீ திரும்புகையில்
உன் கழுத்தில் ஜொலிக்கும்
நீர்த்திவளைகள்..!

உன் கால்களின் நர்த்தனத்தில்
நளினமாய் இசைக்கும் கொலுசொலி..!

தோழிகளின் பவனியில்
குதூகல சிரிப்புக்கு இடையே
தனித்து ஒலிக்கும் சிரிப்பு..!

தலையில் ஆடும்போது
தரையில் விழுமோ என
பயத்தை விதைக்கும் ரோஜா..!

அடிக்கடி அலைந்து
அங்கும் இங்கும் ஓடி
என்மேல் நிலைக்கும்
உன் கண்கள்..!

அனைத்தையும் ரசிக்கும்
ரசிகனாய் நான்..!


-'பரியன் வயல்' சே.குமார்.