வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: February 2010

Sunday, February 28, 2010

பிரிவு தாகம்

மார்கழிக் காலை...
மயக்கும் மாலை...
சுட்டெரிக்கும் பகல்...
சுகமான இரவு...
எல்லா நேரத்திலும்
என் அருகே நீ..!

எட்டிப் பிடிப்பது
கட்டிப் பிடிப்பதுமாய்...
இழுத்து அணைப்பதும்
இறுக அணைப்பதுமாய்...

எத்தனை முறை உன்
அணைப்புக்குள் சிக்கிக்
கொண்டாலும் மீண்டும்
கேட்கும் உன் கதகதப்பு..!

சிணுங்கலாய் கோபித்தாலும்
சில நேரமே விலகியிருப்பாய்...
தனித்திருக்க நினைத்தாலும்
தழுவலை நாடும் என் இதயம்...
நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

இன்று நம் காதல்
செல்பேசி வழி சிணுங்கலும்
கணிப்பொறி வழி
முகம் பார்த்தலுமாய்...

எனக்கு
உன் வரவு 
குறிஞ்சிப் பூவாய்...
என் வாழ்க்கை
விட்டில் பூச்சியாய்...
-'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, February 23, 2010

ஜாதீய தாகம்


ஜாதிக்கொரு சங்கம்...
வீதிக்கொரு பலகை...

கோயில் பிரச்சினை
கும்பிடும் ஐயனாருக்கு
ஜாதிக்கொரு பூட்டு..!

பூட்டுச் சிறைக்குள் சிலைகள்
வேதமந்திரம் வீதியில்..!

திருவிழா நடத்த
தீர்மானித்த கூட்டத்தில்
முன்னோடியாய் ஜாதி..!

அருவாளும் கத்தியும்...
கம்பும் கற்களும்...
அவசர வேலையில்...

உயிருக்குப் பயந்து
சிதறிய மனிதர்களின்
செருப்புகள் சிதறியிருந்தன
ஜாதி அறியாமல்..!

சிதறிய ரத்தம் எல்லாம்
சிவப்பாய்...
ஜாதியின் பெயரோ...
வீதியின் பெயரோ...
அறியாமல் கலந்து..!

அடிபட்டாலும் மனசுக்குள்
எரிந்து கொண்டுதான்
இருந்தது ஜாதீய தீ..!

என்று தணியும் இந்த
ஜாதீய தாகம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.




Saturday, February 20, 2010

அங்கும்... இங்கும்...

அங்கு:

வசீகரிக்கும் கண்கள்...
நீளமான மூக்கு...
புன்னகைக்கும் உதடுகள்...
அழகான மீசை...
அளவான தாடி...
பரந்த தோள்...
விரிந்த மார்பு...
மேவிய வயிறு...
கடைந்தது போல் கால்கள்...
எல்லாம் கனவாய்...
அருகில் குறட்டைவிட்டு
தூங்கும் ஒல்லிக் கணவன்..!

இங்கு:

மயிலிறகாய் நீண்ட கூந்தல்...
அழகிய நெற்றி...
கவரும் கருவிழி...
கூர்மையான நாசி...
ஆப்பிள் வதனம்...
வசீகரிக்கும் அதரம்...
சங்குக் கழுத்து...
உடுக்கை இடை...
எல்லாம் கனவாய்...
அருகில் குண்டு மனைவி..!

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..?




Tuesday, February 16, 2010

புன்னகை பூ..!



உன் வரவுக்காக
நினைவுகளின் துணையோடு
மதில் மேல் பூனையாய் நான்..!

வருவோர் போவோரின்
பார்வைகள் துளைத்தாலும்
தொலைக்காத நினைவுகளுடன்..!

நண்பர்கள் கச்சேரி
நடக்கும் அரசமரத்தடியில்
என் வரவிற்காக நட்பின் வட்டம்..!

குட்டிச்சுவற்றின் மீது
உன் வரவுக்காக
தவிக்கும் இதயத்துடன்
நட்பு மறந்து நான்..!

எதேச்சையாய் பார்த்த
அப்பாவின் நண்பர்
என்னப்பா குட்டிச்சுவரில் வாசம்
என்கிறார் கிண்டலாக..!

என் சுவாசத்திற்காக என்று
சொல்ல எத்தனித்த நாவை
கடித்துக் கொள்கிறேன்..!

அவர் பார்வையில் தெரிந்தது
என் அப்பாவிடம் வத்திவைக்க
இருக்கும் அவரின் நெஞ்சம்..!

எதையும் நினைக்காமல்
உன் நினைவாய் உன் வரவுக்காக..!

இதயமும் நொடியும்
மாறி மாறி துடிக்க...
வழி மேல் விழி வைத்து...

தோழியருடன் நிலவாய் நீ...
எதேச்சையாய் பார்ப்பதுபோல்
பார்த்தாய்... பின் பூத்தாய்...
மலருமுன் மறைந்து விட்டாய்..!

புன்னகையால் பூத்த இதயத்துக்குள்
உன் நினைவோடு நண்பர்களை
நோக்கி பயணிக்கும் என்னைவிட
மின்னலாய் மனது...

 உன் புன்னகையை
அவர்களிடம் பூக்கவிட..!

-சே.குமார்




Wednesday, February 10, 2010

கொதிக்கும் மீன் ஆசை


பக்கத்து வீட்டிலிருந்து வரும்
வாசத்தால் நாவில் உமிழ்நீர்...

ம்... குளத்து மீன் நல்லாயிருக்கும்
நமக்கெங்கே அது கிடைக்கிறது...

அவனவன் ஊர் கட்டுப்பாட்டை
மீறி களவாண்டு திங்கிறான்...

நாம வாசத்தை மோந்து
பார்த்து நோவ வேண்டியதுதான்...

மனைவியின் புலம்பலால்
நாளை நம்ம வீட்டிலும்
குளத்து மீன் கொதிக்கும்...

பாச்சை வலையை
யாரும் அறியா இரவில்
கட்டிவிட்டு வீடு வந்தான்...

நாளை குளத்துமீன் குழம்புக்கு
அம்மியில் மசாலா அரைத்து
சேர்த்து வைத்துவிட்டு
மகிழ்வுடன் படுக்கும் போது

'நேரத்துல கிளப்பிவிடு
ஆளுக எழும்புறதுக்குள்ள
வலை எடுக்கணும்...'

பாவம்..
இரவில் திடீர் மழை
பெய்யும் என்பதும்...

அதில் பாச்சை வலை
பாழாப்போகும் என்பதும்..

அறியாமல் மீன் ஆசையோடு
ஆழ்ந்த உறக்கத்தில்..

-சே.குமார்









Saturday, February 6, 2010

மேய்ப்பன்..!


வெயில் தாங்காத எருமை...
மழை தாங்காத பசு...
இரண்டுக்கும் நான்
மேய்ப்பனாக..!

காட்டுக்கு ஒன்று
வீட்டுக்கு ஒன்று
கயிரை இழுத்ததால்
காலை வாரியது..!

அம்மா வருமுன்
ஆவலாய் வீட்டுக்குள்...
தாயைக் கண்ட கன்று
பசியோடு புசித்தது
தாயின் மடியில்..!

எருமையோடு போராடி
எதிர்க்க முயன்றும்
முடியாமல் உருவிவிட்டேன்
ஒடிச் சென்றது நீருக்குள்..!

கரையிலிருந்த நான்
சற்றே கண்ணயர்ந்தேன்...
அவசர கதியில்
எங்கோ சென்றது எருமை..!

தேடிக் கலைத்து
வெறுங்கையுடன்
வீடு வந்தபோது...

'எருமை மாடே'
பசுவை விட்டுட்டு என்ன
புடுங்கினாய்...
பாலெல்லாம் போச்சு..!

எருமை மாடு
எருமையை தொலைந்தது
தெரியாமல்...
பால் போன வேதனையில்
வெடித்தாள் அம்மா..!

-சே.குமார்




Thursday, February 4, 2010

அப்பா... மகன்...

(ஆகஸ்ட்-2009ல் ஆர்வத்தோடு கிறுக்க ஆரம்பித்து இன்று வரை எனது வலைத்தளங்களான கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் மற்றும் மனசு ஆகிய நான்கு வலைப்பூக்களிலுமாக இது 150வது படைப்பு.)


கடந்து சென்ற காலங்களில்
காட்டுத்தீயாய் எனக்குள் நீ..!

உன் முதுகில் நான் செய்த சவாரி
என் மகனுக்கு கிட்டவில்லை...
இயந்திரமான உலகில்
இயந்திரச் சைக்கிளில் அவன்..!

உன் கைபிடித்து நான்
நடந்த தருணங்கள்
உனக்களித்த சந்தோஷம்
எனக்கு கிட்டவில்லை...
பள்ளிப் பேருந்தில் அவன்..!

எனக்கும் உனக்கும்
ஆறுதலளித்த நம் அருகாமை
எங்களுக்குக் கிட்டவில்லை
ஹாஸ்டலில் அவன்..!

எல்லோரிடமும் சகஜமாய்
பேசும் அவன்
என்னிடம் செல்பேசியில்
பேசினாலும் அளவோடு..!

உனக்கும் எனக்குமான நட்பில்
அன்பிற்கு எல்லை இல்லை...
அவனுக்கும் எனக்குமான நட்பில்
புன்னகைக்கும் எல்லை உண்டு..!

நீயும் நானும்
பாசத்தின் அடிமைகள்...
அவனும் நானும்...?

-சே.குமார்