வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: November 2009

Monday, November 30, 2009

புரியாத காதல்


நீ எனக்கு யாதுமாகி
இருப்பாய் என்றிருந்தேன்...
யாரோ மாதிரி
அல்லவா இருக்கிறாய்..?

நேற்றுவரை என்னை
சுற்றிவந்த நீ...
இன்று என்னிடம்
வராமல் சுற்றுவதேன்..?

எத்தனையோ முறை
என் இதழ் தேன்
குடித்த நீ...
இப்போது விஷம்
குடித்தது போல்
வெறுப்பதேன்..?

எத்தனையோ முறை
என் எச்சில்பட்டவை
எல்லாம் உன் வாய்ககுள்..!
என்னை எச்சிலாக்கிவிட்டு
எங்கோ சென்றுவிட்டாயே..?

நான் தடுத்தும்
நீ எடுத்துக் கொண்டாய்...
உன் மேலான
நம்பிக்கையில்
முற்றும் துறந்த
என்னைத் துறந்தாயே..?

மலருக்கு மலர் தாவும்
வண்டாக நீயில்லாமல்
மலர் தாங்கும்
காம்பாக நீயிருப்பாய்
என்றிருந்தேன்...
கனவாக்கிச் சென்றாயே..?

அனுபவத்தின் ஆழம்
புரிந்த எனக்கு
நம் காதலின் ஆழம்
புரியாமல் போனதேனோ..?

-சே.குமார்.




Sunday, November 29, 2009

மனசு



முரட்டுத்தனமாக
கையாளப்பட்டது
குழந்தை..!
துடித்தது மனசு..!

தூரத்தில் நான்
செல்ல வேண்டிய
பேருந்து..!

குழந்தையை மறந்து
பேருந்தில்
இடம் பிடிக்க
என்னையறியாமல்
கால்களை
விரட்டியது மனசு..!

-சே.குமார்




Tuesday, November 24, 2009

நித்திரையை கொன்றவளே..!



சித்திரையில் பூத்து
நித்திரையை கொன்றவளே..!
விழித்திரை மூடினால்
கனவுத்திரையில் நீ..!

சன்னல் திரை நீக்கி
நீ தரும் தரிசனம்...
எண்ணத்திரையில்
எழுதாத ஓவியம்..!

நீ முகத்திரை விலக்காமல்
கடந்து சென்ற போதினிலே...
என் மனத்திரை தானாக
மலர்ந்ததன் மாயமென்ன..?

உன் விழித்திரை திறந்தாலே...
வீழ்ந்திடுவர் கனவுத்திரை
நாயகிகள்..!

எத்திரை இருந்தாலும்
என்னுள் முத்திரை
பதித்தவளே..!
என் நித்திரையை
கலைத்தவளே..!

எப்போது உன்
இதயத்திரை விலக்கி
என் உயிர்த்திரையை
காப்பாய்..?

-சே.குமார்




Sunday, November 22, 2009

நீ..!



அதிகாலை குளிரிலும்
மார்கழி மாத
மாக்கோலமாய் நீ..!

உன் கருங்கூந்தல்
அலையிலாடும்
படகாய் காற்றில்..!

பொட்டிட்ட நெற்றியோ
ரவிவர்மாவின் ஓவியமாய்..!

குளத்தில் நீந்தும்
கண்கள் தூண்டிலாய்..!

மருவற்ற நாசி
மீனாட்சி கிளியாய்..!

உதடுகளோ
அழகிய செர்ரியாய்..!

சங்கு கழுத்தில்
சதிராடும்
ஒற்றைச் சங்கிலி
தொட்டில் குழந்தையாய்..!

ஓட்டியாணம் இட்ட
ஒடியும் இடையோ
மலைச்சாரல்
ஒற்றையடி பாதையாய்..!

உன் மொத்தமும்
பித்தமாய் என்னுள்..!

நீ...
பித்தனை புத்தனாக்காமல்
பிரம்மன் ஆக்குவது
எப்போதோ..?

-சே.குமார்




சந்தோஷம்



பறவைகள் பணி
முடிந்து திரும்பும் மாலை..!
கடற்கரை மணலில் கட்டுண்ட
ஈருடல் ஓருயிர்கள்..!
படுக்கையறையாகிப் போன
படகு மறைவுகள்..!
குதித்து வரும் அலையில்
குதிகால் நனைக்கும் குமரிகள்..!
அலையோடு போராடி
மணல் வீடு கட்டும்
குழந்தைகள்..!
அனைவரும்
சந்தோஷமாய்..!
காதலைத் தொலைத்த
என்னைத் தவிர..!

-சே.குமார்




Saturday, November 21, 2009

காத்திருக்கிறேன்



காதலைக் காட்டிய ஞாயிறு
கடந்து போனாலும்
நினைவெல்லாம் நீ..!

எனக்கு ஞாபகம்
இருக்கிறது...
வாசலில் மாக்கோலம்
இட்ட நீ கோலத்திற்குள்
காதல் வைத்துச் சென்றாய்..!

பார்வையாலேயே
பரிமாற்றங்கள் நடத்திய
நமக்குள் பரிபாஷைகள்
எப்போது..?

தனிமையில்
தவிப்போடு நான்...
காதல் சந்தோஷம்
மனசுக்குள்..!

உன் குரல் இப்போது
கேட்காதா..?
ஆவலாய் அலையும்
காது மடல்கள்..!

தென்றலாய் என்
இல்லம் புகுந்த நீ...
என் அன்னையிடம்
திருவிழா செல்வதாக
சொல்கிறாய்...
எனக்கு கேட்கவேண்டும்
என்பதற்காகவே
சற்று அதிக சப்தத்துடன்..!

வெளியில் வரும் நீ
வருகிறேன் என்கிறாய்
என்னிடம் கண்களால்..!

உன் கண் பேசும்
வார்த்தைகளை
வாய் பேசியிருந்தால்..!

என் நினைவுகளைக்
கலைத்தது
உன் இல்லத்தில் இருந்து
கிளம்பிய காரின் ஒலி..!

எப்போது மீண்டும்
எனக்குள் கோலமிடுவாய்..!

எதிர் நோக்கி
வீதியின் விளிம்புவரை
பார்வையை செலுத்தியபடி
காத்திருக்கிறேன்
இரண்டு ஞாயிறாக..!

-சே.குமார்




Thursday, November 19, 2009

காதல் கபடி



நீ எனக்கு இட்ட
மருதாணிக்குள்
மறைத்து வைத்தாய்
உன் காதலை..!

சாப்பிடும் போது
சாதம் இடும் சாக்கில்
உன் விரல்களால்
தொட்டுச் சென்றாய்
என் கைகளை..!

அனைத்துக் கண்களும்
தொலைக்காட்சியில்
நிலைகொண்டிருக்க
அடிக்கொரு முறை
என் மீது வீசினாய்
உன் கண்களை..!

குழந்தைகளுடன் நீ
விளையாண்ட போதும்
அவ்வப்போது
எனக்கு பரிசாய்
அனுப்பினாய்
உன் சிரிப்பை..!

அத்தை மகளாக
நீ இருந்தாலும்
இனிக்கத்தான் செய்தது
யாருக்கும் தெரியாமல்
நமக்குள் நடக்கும்
காதல் கபடி..!

-சே.குமார்




Wednesday, November 18, 2009

காத்திருக்கிறேன் காதல் நினைவுகளோடு..!



நாம் காதலித்த
அந்த தருணங்களை
இப்போது நினைத்தாலும்
நெஞ்சுக்குள் பசுமையாய்
துளிர் விடுகிறது
நம் காதல்..!

நம் முதல் சந்திப்பு
முருகன் கோவிலில்...
உன் அம்மா பின்னே
நீலத்தாவணியில் நீ..!

நான் பார்ப்பதை
அறிந்து விரலால்
மாக்கோலமிட்டாய்
மார்பிள் தரையில்..!

பின்னர் அடிக்கடி
சந்திப்பதற்காகவே
உன் வீட்டுப் பாதையில்
உலாவரலானேன் நான்..!

காதல் மலர்ந்ததும்
எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
யாரும் பார்த்து
விடக்கூடாதென்ற
பயத்துடன் தெருமுனையில்
காத்திருப்போமே..!

இன்று நினைத்தாலும்
உள்ளுக்குள் அசசம்..!

பாய் கடைக்கு எனக்காக
போன் பேச வரும் உன்னை
பேப்பர் படிப்பது போல்
படித்த அந்த இனிய தருணங்கள்..!

நீ சைக்கிள் ஓட்டும்
அழகை என் வீட்டு
மாடியில் இருந்து
நான் பார்த்து ரசித்த
அந்த அழகிய நாட்கள்..!

ஆற்றில் நீ குளித்துத்
திரும்புகையில்
உன் முகத்தில்
அழகாய் இருக்கும்
தண்ணீர் துளிகளை
கண்டு ரசிப்பதற்காகவே
ஒற்றையடிப் பாதையில்
உன் எதிரே வந்து
அருகில் வந்ததும்
ஒதுங்காமல் ஒரு கணம்
மெய் சிலிர்த்து நிற்கும்
அந்த மாலை நேரங்கள்..!

ஒருமுறை நான் கேட்டேன்
என்பதற்காக நீ கஷ்டப்பட்டு
பயத்துடன் கொடுத்த
அந்த முதல் முத்தத்தின்
ஈரம் என் கன்னத்தில்
இன்றும் பதமாய்..!

இப்படி எத்தனையோ தருணங்கள்
நினைத்த மாத்திரத்தில்
நெஞ்சுக்குள் பசுமையாய்..!

திருமணத்திற்குப் பின்னும்
தொடர்ந்த நம் காதல்...
அதனால் கிடைத்த
சந்தோஷங்கள்
ஒன்றா... இரண்டா..!

நம் காதல் காத்திருப்புகள்
இன்றும் தொடர்கின்றன...
அன்று உன் வரவுக்காக
காத்திருந்தேன்..!

இன்று உன்னிடம் வருவதற்காக
காத்திருக்கிறேன்...
காலன் வருவானா..?

-சே.குமார்




Sunday, November 15, 2009

காதலின் சுகம்



கோபங்களும்
தாபங்களும்
தேங்கிய
காத்திருப்புக்குப் பின்
சந்திப்பதே
காதலின் சுகம்..!

சின்னச் சீண்டல்களும்
செல்லச் சிணுங்கல்களும்
இனிய காதலின்
சங்கீதம்..!

மணித்துளிகள்
கரைய பேசினாலும்
என்ன பேசினோம்
என்பது தெரியாதது
காதலின் சுவராஸ்யம்..!

சண்டையும்
சமாதானமும்
மாறி மாறி
வருவதே
இன்பக் காதலின்
இனிய பயணம்..!

வெயிலும்
மழையும்
வீணாய் போகாமல்
அனுபவிப்பதே
காதலின் அடையாளம்..!

என்னுயிர் நீ...
உன்னுயிர் நான்...
என்ற தாரக மந்திரமே
காதலின் இதயமாற்று
அறுவைச் சிகிச்சை..!

ஆம்...
கசப்பு இல்லா
பல்சுவையின்
பரவசம்தான்
காதல்..!

-சே.குமார்




Saturday, November 14, 2009

நினைவுகளில் நீ..!




நீ என்னை
மறைந்திருந்து
ரசித்த திண்ணையில்
நான் அமர்ந்தபோது
என்னுள்ளே
மின்னலாய்
உன் உருவம்..!

உன் பாதங்கள்
சுற்றித் திரிந்த
வளைவுகளில்
வலம் வந்தபோது
என் காதில்
இசையாய் உன்
கொலுசொலி..!

கிணற்றடிக்கு
வந்த போது
நீ பிடித்து
நீர் இறைத்த
தாம்புக் கயிற்றில்
நிழலாடி நிழலானது
உன் வளைக்கரம்..!

தோட்டத்தில் நீ
வளர்த்த
வாடாமல்லியை
வாஞ்சையுடன்
பார்த்த போது
அதில்
பூத்து மறைந்தது
உன் புன்னகை..!

தோட்ட மூலையில்
நீ கிழித்து வீசிய
தாவணியின்
சிறிய பாதியில்
இலைமறை காயாய்
தெரிந்தது
உன் இளமை..!

உன் நினைவாய்
நீ வாழ்ந்த வீட்டை
நான் வாங்கியபோது
நீ விட்டுச் சென்ற
ஞாபகங்கள்
வீடெங்கும்
வியாபித்திருக்க...

நீ...
இல்லா
வெறுமையோடு
நான்..!

-சே.குமார்




Wednesday, November 11, 2009

சுமை

கனவின் பிடியில்
கண்ணயர்ந்து...
விடியலின் விலாசமாய்
அம்மாவின் குரல்..!
கனவுக்கு விடைகொடுத்து
விழித்த போது...
தண்டச் சோறுக்கு
என்ன இன்னும்
தூக்கம்..?
அதட்டலாய்
அப்பாவின் குரல்..!
கனவுகூட சுமையானது..!

-சே.குமார்




Sunday, November 8, 2009

விலைமாது

மங்கிய விளக்கொளியில்
மங்கலாய் ஒரு உருவம்..!
ஆடைகளைப் பற்றிய
கவலையின்றி
பொறுக்கினாள்...
விலகிச் சென்றவன்
விட்டுச் சென்ற
சில்லறைகளை..!

உடம்புக்கு ஓய்வு
தேவைப்பட்ட போதும்
அடுத்தவனின் பசி தீர்க்க
தயாரானாள் தவிப்போடு...

வந்தவன் புதியவனா...
அறிமுகமானவானா...
யாராக இருந்தால் என்ன..?
பணமே பிரதானம்...

யோசிக்க மனமின்றி
பூஜைக்கு ரெடியானாள்...

-சே. குமார்




Monday, November 2, 2009

மனைவி



நீயும் நானும்
காதலித்த தருணங்களில்
வாய் ஓயாது
பேசியபடி நீயும்...
ரசித்தபடி நானும்...
சாலையில் வருவோர்
பற்றிய கவலையின்றி
செல்வோமே..!

மழையில் நனைந்து
நான் வரும்
வேளைகளில்
துப்பட்டா துறந்து
துடைப்பாயே..!

உனக்குப்
பிடிக்காத போதும்
எனக்காக
நண்பன் வீட்டில்
மீன் சமைத்தாயே..!

எல்லாம் எனக்கு
மீண்டும் வேண்டும்..!

வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?

-சே.குமார்