ஏலே ராசு
எங்கடா போனே முண்டம்?
மாட்டை அவுக்காம...
இந்தா வாரேன் ....
குத்திய பம்பரம்
பாக்கெட்டுக்குள் நுழைய
எதேச்சையாய் இழுக்கப்பட்டது
பள்ளியில் கொடுத்த காக்கி டவுசர்..!
ஓடிய வேகத்தில்
கசாலைக்குள் நுழைய முடியாமல்
தடுத்தது மூச்சுக்குரல்..!
கட்டிய மாடுகளுக்கு
அந்தப் பக்கம்...
அப்பாகூட யாரோ....
மாட்டை அவிழ்க்க சென்றால்
அப்பா அடிப்பார்...
அவிழ்க்காமல் சென்றால்
அம்மா அடிப்பாள்...
யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!
என்னடா மாடவிழ்க்காம...?
கேள்வி முடியும் முன்...
அப்பா அங்கே.... பதிலாய்...
அவரு எதோ தப்பு பண்றாரு..?
நீ கேக்க மாட்டியா...?
கண்களில் கோபம் கண்ணீராய்...
அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!
-'பரியன் வயல்' சே.குமார்