பக்கத்து வீட்டிலிருந்து வரும்
வாசத்தால் நாவில் உமிழ்நீர்...
ம்... குளத்து மீன் நல்லாயிருக்கும்
நமக்கெங்கே அது கிடைக்கிறது...
அவனவன் ஊர் கட்டுப்பாட்டை
மீறி களவாண்டு திங்கிறான்...
நாம வாசத்தை மோந்து
பார்த்து நோவ வேண்டியதுதான்...
மனைவியின் புலம்பலால்
நாளை நம்ம வீட்டிலும்
குளத்து மீன் கொதிக்கும்...
பாச்சை வலையை
யாரும் அறியா இரவில்
கட்டிவிட்டு வீடு வந்தான்...
நாளை குளத்துமீன் குழம்புக்கு
அம்மியில் மசாலா அரைத்து
சேர்த்து வைத்துவிட்டு
மகிழ்வுடன் படுக்கும் போது
'நேரத்துல கிளப்பிவிடு
ஆளுக எழும்புறதுக்குள்ள
வலை எடுக்கணும்...'
பாவம்..
இரவில் திடீர் மழை
பெய்யும் என்பதும்...
அதில் பாச்சை வலை
பாழாப்போகும் என்பதும்..
அறியாமல் மீன் ஆசையோடு
ஆழ்ந்த உறக்கத்தில்..
-சே.குமார்


