வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: October 2009

Saturday, October 31, 2009

நினைவுகள்

கணக்கிலடங்கா நினைவுகளில்
துல்லியமாய்
உன் நினைவுகள்..!

கற்பனையின்
கதைக்கருவை
உன் நினைவுகள்
என் நெஞ்சினுள்
நிகழ்வுகளாய்..!

மறக்கமுடியாத
செயல்களில்
மறுக்க முடியாமல்
உன் நினைவுகள்..!

நினைவுகள்
நிச்சயமற்றவைதான்..!
உன்
நினைவுகளைத் தவிர..!

என் விடியலின்
ஆரம்பமே...
உன் நினைவுகளோடுதான்...
என்பது உனக்குத்
தெரியுமா...?

-சே.குமார்




குட்டித் தேவதை



வேசங்களில்லா பாசத்திலும்...
சொல்லத்தெரியா நேசத்திலும்...
எனக்கு முன்னோடி நீ..!

சொற்களை சொல்லாத
மழலை மொழியில்
கொஞ்சிப் பேசும்
சொன்னதை சொல்லாத
கிளிப்பிள்ளை நீ..!

உன் சுட்டித்தனங்கள்
மற்றவர்களுக்கு
வேப்ப எண்ணையில்
தோய்த்த பாகற்க்காயாக
இருந்தாலும்...
எங்களுக்கோ
தேனில் நனைத்த
பலாச்சுளை போல...

உன் சேஷ்டைகள்
சில நேரம்
சிரிக்க வைத்தாலும்
பல நேரம்
சிந்திக்க வைத்துள்ளது
என்பதே நிதர்சனம்..!

மானாக...
மயிலாக...
குயிலாக...
எப்படி நடந்துகொண்டாலும்
என் இதயத்துடிப்பின்
இருப்பிடமே நீதான்..!

பிரச்சினைகளில்
நான் தவித்த போது
உன் பிஞ்சு விரல்களே
என் நெஞ்சுக்கு ஆதரவு..!

சொந்தங்கள் சூழ
இன்று உனக்கு
பிறந்தநாள் கொண்டாட்டம்..!

உன்னருகே நானில்லா
வருத்தம் எனக்கு..!
நானில்லா வருத்தம்
வேண்டாம் உனக்கு..!

தூரமிருந்தாலும்
தூரமின்றி
வழ்த்துகிறேன் அன்பு மகளே..!


(எனது உயிர், என் குட்டித் தேவதை, என் மகள் ஸ்ருதியின் பிறந்தநாள் அன்று என்னால் போகமுடியாத தருணத்தில் இரவு நேர தனிமையில் கண்ணீருடன் எழுதியது.)

-சே.குமார்




Monday, October 26, 2009

நடை பிணம்

அழத் தெரியாமல் நீயும்...
அழுவது தெரியாமல் நானும்...
அருகருகே..!

ஆறுதலாய் பற்றிக்கொள்ள
கைகள் துடித்த போதும்
மனசு மறுத்தது..!

அதே நிலைமைதான்
உன்னுள்ளும் என்பதை
பறைசாற்றின பரபரத்த
உன் கைகள்..!

உன் நலம் விசாரிக்க
நா துடித்தது...
என் நலம் விசாரிக்க
உன் நா துடிப்பதை
உணர்த்தின
உலர்ந்த உதடுகள்..!

இருந்தும் வாய் பேச
முடியாமல்
உணர்ச்சிகளற்று
பிணங்களாய் ..!

உறவினரின் திருமண
விழாவில் புதிய
உறவுகளோடு நாம்..!

-சே.குமார்




Saturday, October 24, 2009

புரிந்து புரியாமல்




நீண்ட நிலா முற்றத்தில்
மூலைக்கு ஒருவராய்
நீயும் நானும்...

நேற்றுவரை நமக்குள்
நிகழ்ந்த சங்கமத்தின்
ஈரம் இன்னும்
இனிப்பாய் நெஞ்சில்..!

நீ எனக்களித்த
முத்தத்தினால் சிவந்த
என் கன்னம்
இன்று அவமானத்தால்..!

நீ காதல் பரிசாய்
எனக்களித்த சங்கிலி
என் வாயில்
பரிதவிப்போடு..!

நம்மைப் பிரிக்க
கடவுளுக்கு கூட
அதிகாரம் இல்லை...
என்றாயே..!

இதோ பிரிக்கக் கூடிய
கூட்டத்தின் எதிரே
மரப்பாச்சிகளாய் நாம்..!

வளவளவென்று
பேசியபடி அவர்கள்...
வாயடைத்து நாம்..!

எங்கே நாம் பார்த்தால்
அழுது விடுவோமோ...
என்பதால் நிலம்
பார்த்தபடி நான்...
நிலா பார்த்தபடி நீ..!

எனக்கு நீ...
உனக்கு நான்...
நமக்கேன் குழந்தை
என்ற நீ...

குழந்தையில்லா
காரணத்தைக்
கையில் ஏந்தி
பிரிக்க நினைப்போர்
முன் வாயடைத்து..!

உன்னைப் புரிந்தும்
புரியாமல் நான்..!

-சே.குமார்




Tuesday, October 20, 2009

எங்கள் ஊர்



இயற்கை அன்னை
அரவணைப்பில்
பசுமை நிறைந்தது
எங்கள் ஊர் என
பொய்யுரைக்க மனமில்லை..!

ஒரு காலத்தில்
பசுமையோடு
இருந்த இடம்
இன்று பாலைவனமாய்..!

கருவேல மரங்களின்
கட்டுப்பாட்டிற்குள்
விளை நிலங்கள்..!

மழையின் போது
நிறைமாத கர்ப்பிணியாகும்
கண்மாயில்
பாசிகளின் பவனியால்
மனிதர்கள் நனைவதில்லை..!

குடிநீர்க் குளமோ
தாகமெடுத்தால்
தண்ணீர் தேடும்
அவல நிலையில்..!

பராமரிப்பின்றி
பாவமாய்
ஊர்க்காவல் தெய்வம்..!

வீட்டுக் கொன்றாய்
வாழ்ந்த மனிதர்கள்..!
வருடம் ஒருமுறை
எட்டிப்பார்க்கும் வாரிசுகள்..!

எது எப்படியோ
இன்னும் உயிர்ப்புடன்
அடி வாங்கி
தண்ணீர் கொடுக்கும்
அடி குழாய்..!
 
-சே.குமார்




Sunday, October 18, 2009

கெடுபிடிகள்..!






பூப்பெய்து விட்டேனாம்
புதிதாக முளைத்தன
சட்டங்கள்...

உள்ளாடை தேடும் தம்பி
என்னிடம் கேட்பது போல்
அவனிடம் கேட்டால்
கடிந்து கொள்கிறாள் அம்மா..!

வீட்டிற்கு வரும்
ஆண்களிடம் பேசினால்
சென்ற பிறகு
திட்டுகிறார் அப்பா..!

தெருவில் செல்ல...
தோழியைக் காண...
ஏகப்பட்ட கெடுபிடிகள்..!

திருவிழா, மணவிழா...
எந்த விழாவானாலும்
சொந்த ஊருக்கு செல்ல
சொல்லமுடியா கெடுபிடிகள்...

கெடுபிடிகளின் மத்தியில்
தூண்டில்  மீனாய் நான்...

மனதிற்குள் வருந்துகிறேன்
ஆணாக பிறந்திருக்கலாமோ..?



-சே.குமார்




Wednesday, October 14, 2009

கடைசி நிமிட பரபரப்பு..!





ஓடும் நினைவுகளை
மருட்சியோடு
நினைவுபடுத்தும்
கண்கள்..!

மூச்சின் சுகத்தை
உணரவைக்கும்
நாசி..!

எதாவது கிடைக்குமா?
தேடலில் உதடு
தடவும் நாக்கு..!

துடிப்பின் துடிப்போடு
தடுமாறும் இதயம்..!

ஒட்டிப்போனாலும்
ரொட்டித்துண்டாவது
உள்ளே வராதா..?
ஏக்கத்தில் வயிறு..!

பற்றிக்கொள்ள
ஏதாவது கிடைக்குமா..?
பரபரக்கும் கைகள்..!

ஓடி ஓடி உழைத்ததால்
சோர்ந்து போயிருந்தாலும்
எங்காவது போகத்துடிக்கும்
கால்கள்..!

எல்லாவற்றின் பரபரப்பும்
வர இருக்கும்
அந்த கடைசி
நிமிடத்தை நோக்கி..!


-சே.குமார்