வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்

Wednesday, December 9, 2009

கரைந்த கனவுகள்



எத்தனையோ கனவுகள்
நெஞ்சுக்குள்..!
நேற்று நண்பன்
கொடுத்த பெஞ்சிலை
மறவாமல் அவனிடம்
கொடுக்க வேண்டும்..!
விமலா மிஸ்ஸிடம்
வீட்டுப்பாடம் காட்ட வேண்டும்..!
சாப்பிடும் போது எதாவது
கொடுக்கும் சாமிலிக்கு இன்று
நாம் கொடுக்க வேண்டும்..!
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறந்து
'அம்மா காப்பாத்து...'
அழுகுரலை மட்டும்
கடைசியாய் காற்றில்
கரைத்துச் சென்றது...
தண்ணீருக்குள் தாவிய பேருந்து..!

-சே.குமார்




Tuesday, December 8, 2009

மழை இரவில்



சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!

-சே.குமார்




Saturday, December 5, 2009

நிறைவாய் நீ..!



ஒற்றை நாடியாம்
உனக்கு
ஊர் செல்கிறது
அதுதானே உன்
அழகு..!

தெற்றுப்பல்லாம்
உனக்கு
தெருவே சொல்கிறது
உன் சிரிப்பின்
அழகே அதுதானே..!

கோபக்காரியாம்
உறவு சொல்கிறது
கோபம் தானே
உன் குணத்தைக்
கூட்டும் அழகு..!

ராசியில்லாதவளாம்
வீடே சொல்கிறது
உன் ராசியின்
ராசி அறியாமல்..!

எல்லோரும் உன்னை
குறை கூறிய போதும்
என் மனதிற்குள்
நிறைவாய் நீ..!

-சே.குமார்




Thursday, December 3, 2009

விரக்தி பயணம்



விடுமுறைக்கு நாட்டுக்கு
மீண்டும் ஒரு விரக்தி பயணம்..!
விழிகளில் வழியும் அன்போடு
விமான நிலைய வாயிலில்
மனைவி... குழந்தை..!

ஒரு வருடப் பிரிவை
ஒரு திங்கள் போக்கிடுமா..?
மனதுக்குள் வேதனை முடிச்சு..!

கால்களை கட்டிக் கொள்ளும் குழந்தை..!
கழுத்தை கட்டிக் கொள்ளும் மனைவி..!
குதூகலத்தின் பிடியில் குடும்பம்..!
சந்தோஷங்களின் மடியில்
கழிந்தன பொழுதுகள்..!

நாட்கள் வாரங்களாகவும்...
வாரங்கள் மாதமாகவும் மாறி...
பாழாப்போன பயண நாளும்
பறந்தோடி வந்தது..!

இரவிலிருந்தே அழுது மயங்கும்
மனைவி... குழந்தை..!
நீர் வற்றிய குளமாய்
சந்தோஷம் வற்றிய முகம்..!

அழுகையின் வாசலை
அடைத்து வைத்து
பயணத்திற்கு தயாராய்..!

'போய் வருகிறேன்' ஒப்புக்காக
சொல்லும் உணர்வில்லா உதடுகள்..!
நேற்றைய சந்தோஷம் துறந்து
உப்பு நீர் சுமந்த விழிகளுடன்...

அடுத்த விரக்தி பயண நாளை
எண்ணியபடி விமானத்தில்..!

-சே.குமார்




Tuesday, December 1, 2009

பால்வினை நோய்

கொடிது... கொடிது... பால்வினை நோய்..!
அதனினும் கொடிது...
அதனால் பாதிப்புக்குள்ளாகும் இளந்தளிர்..!!

(01-12-2009 (செவ்வாய்) உலக பால்வினை (எய்ட்ஸ்) ஒழிப்பு தினம், கட்டறுப்போம் பால்வினை நோயை... உருவாக்குவோம் பால்வினை (எய்ட்ஸ்) இல்லா உலகத்தை..!)




வெறிக்கு வரியாய்...
இச்சையின் எச்சமாய்...
உறவுக்கு வரவாய்..
தாசி கொடுக்கும்
இலவச இணைப்பு..!

***

தாகாத உறவுக்கு
கிடைத்த வெகுமானம்...
தரங்கெட்டுப் போகுமே
உன் மானம்..!

***

இனித்திரும்பா பயணத்தை
இனிதே நடத்திவைக்கும்
வேட்டைக்காரன்..!

***

நீ அலைந்து பெற்றது...
அநியாயமாய்
உனக்கு மட்டுமான
மனைவிக்கும்...
வாரிசுக்கும்..!

-சே.குமார்