விடுமுறைக்கு நாட்டுக்கு
மீண்டும் ஒரு விரக்தி பயணம்..!
விழிகளில் வழியும் அன்போடு
விமான நிலைய வாயிலில்
மனைவி... குழந்தை..!
ஒரு வருடப் பிரிவை
ஒரு திங்கள் போக்கிடுமா..?
மனதுக்குள் வேதனை முடிச்சு..!
கால்களை கட்டிக் கொள்ளும் குழந்தை..!
கழுத்தை கட்டிக் கொள்ளும் மனைவி..!
குதூகலத்தின் பிடியில் குடும்பம்..!
சந்தோஷங்களின் மடியில்
கழிந்தன பொழுதுகள்..!
நாட்கள் வாரங்களாகவும்...
வாரங்கள் மாதமாகவும் மாறி...
பாழாப்போன பயண நாளும்
பறந்தோடி வந்தது..!
இரவிலிருந்தே அழுது மயங்கும்
மனைவி... குழந்தை..!
நீர் வற்றிய குளமாய்
சந்தோஷம் வற்றிய முகம்..!
அழுகையின் வாசலை
அடைத்து வைத்து
பயணத்திற்கு தயாராய்..!
'போய் வருகிறேன்' ஒப்புக்காக
சொல்லும் உணர்வில்லா உதடுகள்..!
நேற்றைய சந்தோஷம் துறந்து
உப்பு நீர் சுமந்த விழிகளுடன்...
அடுத்த விரக்தி பயண நாளை
எண்ணியபடி விமானத்தில்..!
-சே.குமார்